Tamil Paper 1: 1. பாரத தேசம் – பாரதியார்
நன்றி: பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் {2017-18 – I Year – Tamil Part 1 for B.A, B.Sc. and B.Com}
பொறுப்பு துறப்பு: இப்பதிவின் நோக்கம் கற்றலேயன்றி, வணிகமன்று! வணிகரீதியாக பகிர்தல் தவிர்க்கவும்!
செய்யுள்
1. பாரத தேசம் – பாரதியார்
ராகம் – புன்னாகவராளி
பல்லவி:
பாரத தேசமென்று பெயர் சொல்லு வார் – மிடிப்
பயங் கொல்லு வார் துயர்ப் பகைவெல்லுவார்
சரணங்கள்:
வெள்ளிப் பனிமலையின் மீதுலவுவோம்; அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம்; எங்கள்
பாரத தேசமென்றுதோள் கொட்டுவோம். (பாரத)
சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர்செய் குவோம். (பாரத)
வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம் (பாரத)
முத்துக் குளிப்பதொரு தென் கடலிலே
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே (பாரத)
சிந்து நதியின்மிசை நிலவினிலே
சேரநன் னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்துத்
தோணிக ளோட்டிவிளை யாடி வருவோம் (பாரத)
கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்ளுவோம்
சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம் (பாரத)
காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்
ராசபு தானத்து வீரர் தமக்கு
நல்லியற் கன்னடத்துத் தங்கம் அளிப்போம் (பாரத)
பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்;
கட்டித் திரவியங்கள் கொண்டு வருவார்
காசினி வணிகருக்கு அவை கொடுப்போம் (பாரத)
ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம்;
உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம் (பாரத)
குடைகள் செய்வோம் உழு படைகள் செய்வோம்;
கோணிகள் செய்வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்பு முணர் வண்டிகள் செய்வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம் (பாரத)
மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்
வானை யளப்போம் கடல் மீனை யளப்போம்
சந்திரமண் டலத்தியல் கண்டு தெளிவோம்
சந்தி தெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம் (பாரத)
காவியம் செய்வோம் நல்ல காடு வளர்ப்போம்
கலை வளர்ப்போம் கொல்ல ருலை வளர்ப்போம்
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள் செய்வோம்
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம் (பாரத)
சாதி இரண்டடொழிய வேறில்லை யென்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மென்போம்;
நீதி நெறியினின்று பிறர்க் குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர் (பாரத)
குறிப்புச் சட்டகம்
- முன்னுரை
- பாரதியார்
- நாமிருக்கும் நாடு நமது
- நாட்டு வளங்களை வெளிக்கொணரல்
- தொழிற்துறையில் மாற்றங்கள்
- அறிவியல் கல்வி
- பாரத தேசம் உணர்த்தும் செய்திகள்
- முடிவுரை
முன்னுரை
மாணவர்களுக்கு மகாகவி பாரதியாரையும் அவரின் பாரத தேசம் என்னும் கவிதையையும் அறிமுகம் செய்வதே இப்பாடப்பகுதியின் நோக்கமாகும். இளைஞர்களிடையே பாரதியாரைப் போன்று தேசப்பற்றையும் நாட்டுப்பற்றையும் நாட்டுக்கு உழைக்கும் மனப்பான்மையையும் உருவாக்குவதே இப்பாடத்தின் குறிக்கோளாகும்.
பாரதியார்
20ஆம் நூற்றாண்டில் தமிழகம் ஈன்ற பெருங்கவிஞர்களுள் ‘மகாகவி’ என்னும் சிறப்புப்பெயர் பெற்றவர் சி. சுப்ரமணிய பாரதியார் ஆவார். இவருடைய பாடல்களில் கருத்தாழமும் ஆற்றலும், எளிமையும், இசை நயமும், தொடர் இன்பமும் ஒருங்கு அமையக் காண்கின்றோம். இவ்வளவு சிறந்த கவிஞர் தமிழ் உலகில் இதுவரை தோன்றியதில்லை என வியந்து போற்றுகிறார் அறிஞர் வையாபுரிப்பிள்ளை அவர்கள்.
1882 ஆம் ஆண்டில் பிறந்தவர் சுப்பிரமணிய பாரதி. தன் பதினொன்றாம் வயதில் புலவர்கள் குழு பாராட்டப் ‘பாரதி’ என்ற பட்டத்தைப் பெற்றவர்.
இவர் பாடிய முப்பெரும் பாடல்கள் கண்ணன் பாட்டு, குயில்பாட்டு, பஞ்சாலி சபதம் ஆகியனவாகும்.மேலும் பாரதி தத்துவப் பொருள் பொதிந்த ‘ஞானரதம்’, புரட்சிக்கருத்தமைந்த சந்திரிகையின் கதை, நீதி போதிக்கும் நவதந்திரக் கதைகள் போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார். புதுவையிலும், சென்னையிலுமாகத் தங்கி தம் இலக்கியப் பணியையும் தேசத் தொண்டையும் ஆற்றி வந்தார்.
நாமிருக்கும் நாடு நமது
“வெள்ளிப் பனிமலையின் மீதுலவுவோம்; அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம்”
என்று தொடங்கும் பாடலின் மூலம் பாரதியார், அச்சம், பகை வென்றவரே பாரத தேசமென்று சொல்லுவார் என்று நமது வீரத்தைப் பறை சாற்றுகிறார். வானை முட்டும் பனி படர்ந்த இமயமலையின் மீது உலவவும், மேற்கு கரை முழுதும் கப்பல் விட்டு வணிகம் செய்யவும், கல்விச்சாலைகளை கோவில்களாக கொண்டாடவும் கூடிய, பரந்த, பாரத தேசம், நம் நாடு என்று புகழ்ந்துரைக்கிறார்.
மேலும், தெற்கில் சிங்களத் தீவிற்கு சென்றுவர பாலம் அமைப்போம், சேது பாலத்தை மேடாக்கி வீதிகள் செய்வோம். வங்கதேச நதிகளில் கரைபுரண்டோடும் நீரினை நம் நாட்டு மையப் பகுதிகற்கு கொண்டு வந்து விவசாயம் வளர்ப்போம் என்றும் தம் ஆசையை வெளிப்படுத்துகிறார்.
நாட்டு வளங்களை வெளிக்கொணரல்
“வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே”
என்று தொடங்கும் பாடலின் மூலம், ஆசிரியர், பாரத நாட்டின் இயற்கை வளங்கள் குறித்தும், அதன் பெருமை குறித்தும் விளக்குகிறார். தங்கம் முதலான கனிம வளங்களை வணிகம் செய்து நமக்கு தேவையான பொருட்களை வாங்கி வருவோம்.
தென்கடலில் முத்தெடுத்து பண்ட மாற்று முறையில் பல நாட்டினரிடம் வணிகம் செய்வோம்.நன்கு உழைப்பதோடு, நல்ல பொழுதுபோக்கின் மூலம், சரியாக ஓய்வெடுப்பதும் அவசியம் என்கிறார் பாரதியார். மேலும், இப்பாடலின் மூலம், அக்காலத்தில், பண்டமாற்று வணிக முறை வழக்கில் இருந்ததும் அறியப்படுகிறது.
தொழிற்துறையில் மாற்றங்கள்
“பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்;
கட்டித் திரவியங்கள் கொண்டு வருவார்”
என்று தொடங்கும் பாடலில், தொழிற்துறையில் கொண்டுவர வேண்டிய மாற்றங்கள் குறித்து பாரதியார் விளக்குகிறார்.
பட்டாடைகளும், பஞ்சினால் செய்த ஆடைகளையும் மலை போல் உற்பத்தி செய்து வீதிகளெங்கும் குவித்து வைத்து, மிகை மதிப்பு தரும் வணிகருக்கு விற்றிடுவோம். ஆயுதங்கள், காகிதங்கள், தொழிற்சாலைகள் மற்றும் கல்விச்சாலைகள் செய்து, பாரத நாட்டின் பொருளாதார மற்றும் கல்வித்திறம் மேம்படுத்த வேண்டுமென்று பாரதியார் கூறுகிறார்.
மேலும், குடைகள், விவசாய மேம்பாட்டிற்கான உபகரணங்கள், கோணிகள், இரும்பாணிகள், வண்டிகள், பெரிய கப்பல்கள் செய்து பாரதத்தின் தொழிற்துறையை மேம்படுத்த வேண்டுமென்கிறார், பாரதியார்.
அறிவியல் கல்வி
“மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்
வானை யளப்போம் கடல் மீனை யளப்போம்
சந்திரமண் டலத்தியல் கண்டு தெளிவோம்”
என்னும் பாடலில், நாம் வேதங்கள் மற்றும் அறிவியல் துணை கொண்டு இவ்வுலகத்தை கற்றுணர வேண்டுமென்கிறார் ஆசிரியர்.
நாம், நம் வேதங்களை கற்றுத் தெளிவதோடு, விண்ணையும், கடல் மீனையும் அறிந்து கொள்வோம். சந்திர மண்டலத்தின் இயல்பையும், சாத்திரங்களையும் கற்போம் என்கிறார் பாரதியார். மேலும், நல்ல காவியங்கள், ஓவியங்கள், கலைகள், கலன்கள் செய்ய வேண்டுமெனவும், உலகின் அனைத்து தொழில்கள் பற்றிய அறிவு மற்றும் திறன் வளர்த்த வேண்டுமெனவும் விரும்புகிறார், பாரதியார்
பாரத தேசம் உணர்த்தும் செய்திகள்
அண்டை நாடுகளுடன் நட்புறவும், வலிமையான வாணிப உறவும் வைத்துக் கொள்வதோடு, பாரதத்தின் அனைத்து வளங்களும், நமது தேசம் முழுமைக்கும் தன்னிறைவைத் தரவேண்டும் எனவும், நமது நாட்டின் தொழிற்துறையின் வளர்ச்சி மற்றும் அதன் உற்பத்தி உலகம் முழுவதும் கேட்டுப்பெறும் நிலையை அடைய அதன் தரமும், அளவும் எட்ட வேண்டுமெனவும் விரும்புகிறார், பாரதியார்.
மேலும், கல்வி, கலை, விவசாயம், விஞ்ஞானம் மற்றும் மெய்ஞானம் ஆகியவற்றிலும் கற்றுணர்ந்து, நீதி நெறியினின்று உயர்ந்தோராய் பாரத சமுதாயம் விளங்க வேண்டுமென, ‘பாரத தேசம்’ என்னும் இக்கவி மூலம் எடுத்தியம்புகிறார், பாரதியார்.
முடிவுரை
நம் நாடு, ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெரும் முன்னரே, சுதந்திரம் கிடைத்து விட்டதாக எண்ணி மகிழ்ந்தவர், பாரதியார். பிற்காலத்தில் வருபவற்றை முன்னரே உணர்ந்து கூறுபவர்கள், கவிஞர்கள். அது போன்ற உணர்விலேயே, வருங்காலத்தில் நமது பாரத தேசம் எவ்வாறெல்லாம் இருக்க வேண்டும் என்று இப்பாடலில் பாரதியார் பட்டியலிட்டுள்ளார்.